அம்பேத்கர் .

B.A, M.A,Ph.D,MSc,Barrister-at- Law,DSc,L.L.D,D.Litt, NO 1 scholar in the World - Columbia University , New York. சுதந்திரம் அடைந்த பின் இந்தியாவில் மன்னர்கள் ஆட்சியை ஒழித்து மக்களாட்சியை கொண்டுவர பல தலைவர்கள் விரும்பினர். அதனையே மக்களும் விரும்பினர். எனவே, இந்தியாவில் மக்களாட்சியை கொண்டுவர அதற்கான முறைப்படியான அரசியல் சாசனம் எழுதப்படவேண்டும்.

அரசியல் மற்றும் அதற்கான சட்டங்களை வரையறுத்தால்தான் நாடு முன்னேற்ற பாதையினை நோக்கி செல்லமுடியும். எனவே அன்றைய இந்தியாவில் மிகச் சிறந்த சட்டம் படித்த மேதைகளை வைத்து இந்திய மண்ணின் அரசியல் சாசனத்தை எழுத நினைத்த அவர்களுக்கு சட்டென முதலில் தோன்றிய பெயர் அம்பேத்கர்.

இந்தியாவில் இருந்து உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் இவர்தான். மேலும் பரோடாவை ஆண்ட மன்னருடன் இணைந்து தீண்டாமை என்ற கொடிய "நோய்" ஒழிய பாடுபட்ட தலைவரும் இவர்தான். சட்டம் மட்டுமின்றி பொருளாதாரம் , அரசியல், தத்துவம் மற்றும் உலக வரலாறு என இவையனைத்தையும் நன்கு அறிந்த மாமேதை. தாழ்த்தப்பட்ட மற்றும் அடித்தட்டு மக்களுக்காக குரல் கொடுத்தவர். இந்தியாவில் சாதியினை ஒழித்து அனைவரும் ஒன்றுபட்டு வாழ நினைத்தவர்தான், அம்பேத்கர்.

அம்பேத்கர் பிறப்பு :

அம்பேத்கர், இன்றைய மத்திய பிரதேசத்தில் உள்ள " மாவ் " எனும் இடத்தில் ராம்ஜி மாலோஜி சக்பாலுக்கும் பீமாபாய் என்கிற தம்பதிக்கு 1891ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி மகனாக பிறந்தார். இவர் இவரது பெற்றோர்களுக்கு 14வது குழந்தையாக பிறந்தார். இவரது குடும்பம் மராத்திய வர்க்கத்தினை தழுவியது.

இவருக்கு இவரது பெற்றோர்கள் இட்ட பெயர் " பீமாராவ் ராம்ஜி " ஆகும். இவர் ஒரு " மகர் " என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர். இயற்பெயர் – பீமாராவ் ராம்ஜி மருவிய பெயர் – அம்பேத்கர்.

கல்வி :

தாழ்த்தப்பட்ட பிரிவினை சேர்ந்தவர் என்பதால் சிறுவயது முதலே பள்ளிகளில் இவர் சந்தித்த இன்னல்கள் அதிகம். பள்ளியில் இவர் மற்ற மாணவர்களோடு அமரக்கூடாது, அவர்களோடு பேசவோ விளையாடவோ கூடாது. அதுமட்டுமின்றி நீர் அருந்தினால் கூட அவர்களுக்கென்று தனியாக வைக்கப்பட்டுள்ள பானையில் இருந்து தான் நீர் அருந்த வேண்டும்.

இவ்வளவு இன்னல்களையும் கடந்து தனது கல்வி அறிவை பெற்றே ஆகவேண்டும் என்கிற வேட்கைக்காக அனைத்தையும் தாங்கிக்கொண்டு தனது ஆரம்பக்கல்வியினை முடித்தார். இவரது தந்தை பணி இடமாற்றம் காரணமாக, இவர்களது குடும்பம் மும்பை நகருக்கு குடிபெயர்ந்தது. இதனால் மும்பையில் அவர் தனது உயர்கல்வியினை தொடர்ந்தார்.

அம்பேத்கர் என பெயர் வரக்காரணம் :

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பெயரைப் பற்றி நிறைய வதந்திகள் பரவி வருகின்றன. பள்ளிப் பதிவேடுகளில் ஒரு பிராமண ஆசிரியர் பாபாசாகேப் பெயரை மாற்றியதாகக் கூறப்படுகிறது, ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ‘அம்பேத்கர்’ என்ற பெயர் ஒரு பிராமண ஆசிரியரால் வைக்கப்படவில்லை. ஆனால் அது டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் தந்தை ‘ராம்ஜி மாலோஜி அம்பேத்கர்’ என்ற குடும்பப்பெயர். இந்தத் தகவல் இந்தியத் தகவல்களில் மார்ச் 1, 1943 தேதியிட்ட ‘ஆளுமைகள்’ என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

பரோடா மன்னரின் உதவியில் இளங்கலை பட்டம் :

கல்வியில் சிறந்து விளங்கிய அம்பேத்கர் அப்போதைய பரோடா மன்னரின் கல்வி உதவி மூலம் அரசியல் மற்றும் பொருளாதாரம் பிரிவில் இளங்கலை படிப்பு படித்தார். அங்கும் அவரை சாதிப்பிரச்னை துரத்தியது. ஆனால், அவர் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அங்கும் ஒரு நல்ல ஆசிரியரின் உதவியுடன் தனது இளங்கலை பட்டத்தை பெற்றார்.

இளங்கலை படிப்பை முடித்த அம்பேத்கர் பரோடா மன்னரின் அழைப்புக்கு இணங்கி அவரது அரண்மனையில் படைத்தலைவராக பதவியேற்றார். அங்கும் சாதிக்கொடுமையினை அனுபவித்தார். மற்ற படைவீரர்கள், அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர் என்று குத்திக்காட்ட, அவர் தனது வேலையினை கைவிட்டு மீண்டும் மும்பை திரும்பினார். மும்பை திரும்பிய அவரை அவரது வீட்டிற்கு சென்று பரோடா மன்னர் சந்தித்தார். அவருக்கு ஏற்பட்ட இன்னல்களை அறிந்தார். அதன் பின்னர் அம்பேத்கரின் கல்வி அறிவினை நன்கு அறிந்த மன்னர், அவரை வெளிநாடு அனுப்பி படிக்க வைப்பது என்று முடிவெடுத்தார்.

அமெரிக்காவில் அம்பேத்கர் :

பரோடா மன்னரின் உதவியுடன் அவர் முதுகலை படிப்பிற்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க அமெரிக்கா பயணம் ஆனார். உயர்கல்வி படிப்பிற்காக ஒரு இந்தியர் அமெரிக்கா பயணிப்பது இதுவே முதன்முறை ஆகும். அங்கும் தனது சிறப்பான படிப்பை தொடர்ந்த அவர் அரசியல், பொருளாதாரம், தத்துவம் மற்றும் சட்டம் போன்றவற்றில் முதுகலை பட்டங்களை பெற்றார்.

தீண்டாமை மற்றும் சாதிப்பிரிவினை :

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் அவர்களது நிலைமை மாறவேண்டும் என்று நிறைய போராட்டங்களை செய்தார். தீண்டாமை மற்றும் சாதிப்பிரச்சனை இரண்டையும் முற்றிலுமாக ஒழிக்க தாழ்த்தப்பட்ட மக்களிடையே தனது பேச்சுகள் மூலம் விழிப்புணவினை ஏற்படுத்தினார்.

இரண்டாவது வட்டமேசை மாநாடு :

இரண்டாம் உலக வட்ட மேசை மாநாட்டில் இந்தியாவின் சார்பாக கலந்து கொள்ள லண்டன் சென்ற அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக "இரட்டை வாக்குரிமை" என்ற சட்டத்தினை கேட்டுப் பெற்றார். பிறகு சில ஆண்டுகளில் காந்தியடிகளின் போராட்டத்தினால் இரட்டை வாக்குரிமை கைவிடப்பட்டு தாழ்த்தப்பட்டோருக்குத் தனித்தொகுதி என்ற ஒப்பந்தத்தையும் கொண்டுவந்தார்.

சட்ட அமைச்சர் :

சுதந்திரம் அடைந்த இந்தியாவின் அரசியல் சாசனத்தை வடிவமைத்த இவர் சட்ட அமைச்சராகவும் பதவியேற்றார். இதன் மூலம் அரசியல் சட்டப் பிரிவுகளை தொகுத்து அதில் அனைத்து இந்திய மக்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் அரசியல் வரையறை என அனைத்தையும் ஆராய்ந்து தொகுத்தார். இது மிகச் சிறந்த ஆவணமாக இன்றளவும் கருதப்படுகிறது.

பௌத்த மதத்தில் ஈடுபாடு :

தன்னைப் போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து வரும் இன்னல்களுக்கு காரணம் அவர்கள் இந்து மதத்தில் இருப்பதனாலே என்று நினைத்த அவர்,தீண்டத்தகாதவர்கள் சமத்துவம் பெறுவதற்கு பௌத்தம்தான் ஒரே வழி என்று வாதிடும் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளின் வரிசையை வெளியிட்ட பிறகு, அம்பேத்கர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாக்பூரில் உள்ள தீக்ஷாபூமியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுடன் 14 அக்டோபர் 1956 அன்று பகிரங்கமாக மதம் மாறினார்.

அம்பேத்கரின் இறப்பு :

பெண்களின் , பிற்படுத்த பட்ட, மிகவும் பிற்படுத்த பட்ட, தாழ்த்தப்பட்ட,அதற்காக அயராது உழைத்து மக்களின் நல்வாழ்விற்காக தனது வாழ்நாள் முழுதும் போராடிய , பல சட்டங்களையும் உருவாக்கிய அவர், 1955ம் ஆண்டு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார். பின்னர் சில மாதங்கள் படுக்கையிலேயே இருந்தார். கடைசியாக 1956ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி தில்லியிலுள்ள அவருடைய வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார்.